தமிழகத்தின் ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இந்தியாவின் சில மாநிலங்களிலிருந்தும் தங்கள் வாழ்க்கைக்கான கலங்கரை விளக்கமாய் திருப்பூரை நோக்கி வந்த மக்களை என்றுமே ஏமாற்றியதில்லை இந்த ஊர்.பனியன் தொழில் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் அரவனைத்து காத்து வருகிறது திருப்பூர்.இந்தியாவுக்கே அந்நிய செலாவணியாக ஆண்டுக்கு சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாயை ஈட்டி தருகிறார்கள் இங்குள்ள மக்கள்.தென்மாவட்டங்களில் விவசாயம் தொய்வு ஏற்பட்ட காலங்களில் திருப்பூரை தங்கள் உழைப்பிடமாக கொண்டு அதில் தங்கள் வாழ்க்கையை சீர் படுத்திகொள்ள வந்த விவசாயிகளின் கண்ணீர் துடைத்தது இந்த ஊர்.
அப்படிப் பெருமை வாய்ந்த இந்த ஊர் பனியன் தொழில் இப்போது பிழைக்குமா,மரிக்குமா என்ற நிலை சாயப்பட்டரைகள் நிறுத்தப்பட்டதன் மூலம் ஏற்ப்பட்டுள்ளது.சுமார் நானகரை லட்சம் தொழிலாளர்கள் நம்பி இருப்பது பனியன் கம்பனிகளைத்தான்.
உள்நாட்டிற்கும்,வெளிநாட்டிற்க்கும் பனியன்,டி-சர்ட்,ஜட்டி உள்ளிட்டவைகளை பனியன் கம்பனிகளில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பபடுகிறது.அந்த பனியன் கம்பனிகளுக்கு தேவையான நூல் மற்றும் துணிகளை சாயமிடுவதற்க்கு சாயப்பட்டரைகள் பயன்படுத்தப்படுகிறது.அவ்வாறு சாயமிடப்பட்டு வெளியேரும் கழிவு நீர் திருப்பூரில் ஓடக்கூடுய நொய்யலாற்றில் கலந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அதன் கரைப்பகுதியான் காங்கயம்,ஒரத்துப்பாளையம்,வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம் சாயப்பட்டரைகள் தாங்கள் வெளியேற்றும் கழிவு நீரை சுத்திகரித்துதான் ஆற்றில் விடவேண்டுமென்றும் அதற்க்கு தேவையான வசதிகளை உடனே மேற்க்கொள்ள வேண்டுமென்றும் அதாவது Ro என சொல்லக்கூடிய சுத்திகரிப்பு முறையை சாயப்பட்டரைகளில் அமைத்து செயல்படவேண்டுமென்று உத்தரவிட்டது.அதற்க்கு கால நிர்ணயமும் செய்தது.
ஆனால் அது மிகவும் செலவு வைக்ககூடியதும் செயல்படுத்த காலம்போதாது எனவும் கூறி சாயப்பட்டரை உரிமையாளர்கள் பதில் மனு தாக்கல் செய்தனர்.இதனை ஏற்று நீதிமன்றமும் காலநீட்டிப்பு கொடுத்தது.ஆனால் அப்படியும் சில நிறுவனங்களால் மட்டுமே குறிப்பிட்ட தேதிக்குள் அதை செயல்படுத்தமுடிந்தது.மற்ற நிறுவனங்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடி மேலும் காலநீட்டிப்பும்,மத்திய மாநில அரசுகளின் உதவியையும்நாடினர் ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அரசு இயந்திரம் அசையவில்லை அதேசமயம் நீதிமன்றமும் காலநீட்டிப்பு தர மறுத்ததோடு,சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத நிறுவனங்களை நிறுத்துமாறும் உத்தரவிட்டது.எனவே சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத நிறுவனங்கள் தற்போது மூடப்பட்டுள்ளது.
இதனால் துணிகளுக்கு சாயமேற்றம் செய்ய முடியாமல் பனியன் நிறுவனங்கள் தற்போது எடுத்த ஆர்டர்களை முடிக்கமுடியாமலும் திணறுகின்றன.பெரும்பாலான கம்பனிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இல்லை.இதில் சரிபாதி ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.பனியன் கம்பனிகளும் சாயப்பட்டரைகளுக்கு ஆதரவாக தினம் ஒரு போராட்டமும்,வாரத்திற்க்கு ஒருநாள் முழுஅடைப்பு நடத்தி அரசின் கவனத்தை திருப்ப முயற்ச்சி எடுத்து வருகின்றன.
இப்படியே போனால் திருப்பூரே வேலை இல்லமால் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும்.எனவே சம்பந்தப்பட்ட அரசுகள் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை எட்டி பனியன் தொழிலையும் தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும்.